தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு கள்ளக்குறிச்சியில் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 May 2026

தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு கள்ளக்குறிச்சியில் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.


உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீசார் மேற்கொண்டதாக கூறப்படும் அடக்குமுறைகளை கண்டித்து, நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போராட்டம், கச்சராபாளையம் சாலை அம்பேத்கர் சிலை அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் கே. சீனிவாசன் தலைமை தாங்கினார்.

நொய்டா, கிரேட்டர் நொய்டா, மனேசர், குருகிராம், பரிதாபாத் மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததையும், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்ததையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தொழிற்சங்கம் அமைப்பது தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும், உழைக்கும் மக்களை ஒடுக்குமுறையால் மிரட்டும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எம். செந்தில், வீராசாமி, சி. ஏழுமலை, தமிழ்நாடு மின் ஊழியர் சங்க திட்ட பொருளாளர் வெங்கடேசன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர். பச்சையப்பன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொருளாளர் பி. கோவிந்தராஜ், வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஏ. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

D.செல்வம் 
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 
தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad